237. அருள்மிகு மணிகண்டேஸ்வரர் கோயில்
இறைவன் மணிகண்டேஸ்வரர், மால்வணங்கீசர்
இறைவி அஞ்சனாட்சியம்மை, கருணை நாயகி
தீர்த்தம் சக்கர தீர்த்தம்
தல விருட்சம் வில்வ மரம்
பதிகம் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர்
தல இருப்பிடம் திருமாற்பேறு, தமிழ்நாடு
வழிகாட்டி தற்போது 'திருமால்பூர்' என்று அழைக்கப்படுகிறது. காஞ்சிபுரத்திலிருந்து அரக்கோணம் செல்லும் சாலையில் திருமால்பூர் கூட்ரோடில் இறங்கி அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தூரம் நடந்து செல்ல வேண்டும். காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ. தொலைவு. காஞ்சிபுரத்திலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் நேரடிப் பேருந்து வசதியும் உள்ளது. காஞ்சிபுரத்திற்கு அடுத்த இரயில் நிலையம் திருமால்பூர்.
தலச்சிறப்பு

ஒரு சமயம் மகாவிஷ்ணு சலந்தராசுரனுடன் போர் செய்வதற்கு புதிய சக்ராயுதம் பெற, இத்தலத்திற்கு வந்து தினமும் ஆயிரம் தாமரை மலர் கொண்டு சிவபூஜை செய்தார். ஒருநாள் ஒரு மலர் குறைய, தனது கண்ணையே எடுத்து அர்ச்சிக்க முயன்றபோது, சிவபெருமான் காட்சியளித்து அவருக்கு சக்ராயுதத்தை அளித்ததாகத் தல வரலாறு கூறுகிறது. திருமால் மீண்டும் சக்ராயுதத்தைப் பெறும் பேறு பெற்றதால் இத்தலம் இத்தலம் 'திருமாற்பேறு' என்ற பெயர் பெற்று பின்னர் மருவி தற்போது 'திருமால்பூர்' என்று அழைக்கப்படுகிறது.

மூலவர் 'மணிகண்டேஸ்வரர்', 'மால்வணங்கீசர்' என்னும் திருநாமங்களுடன் அழகிய லிங்க வடிவில் காட்சி அளிக்கின்றார். அம்பாள் 'அஞ்சனாட்சியம்மை', 'கருணை நாயகி' என்னும் திருநாமங்களுடன் தரிசனம் தருகின்றாள்.

மூலவர் எதிரில் நந்திதேவர் நின்ற நிலையிலும், அவருக்குப் பின்னால் திருமால் மலர் கொண்டு வழிபட்டதன் அடையாளமாக கூப்பிய கரங்களோடு அவர் நிற்கும் திருக்கோலத்தையும் காணலாம். இவர் 'செந்தாமரைக் கண்ணப் பெருமாள்' என்று அழைக்கப்படுகிறார். மகாவிஷ்ணுவுக்கு தீபாரதனை முடிந்தவுடன் சடாரி, தீர்த்தம் தரும் வழக்கம் உள்ளது. மேலும் மாசி மகத்தையொட்டிய பிரம்மோற்சவத்தின்போது தீர்த்தவாரி அன்று பெருமாளுக்கு கருட சேவையும் நடைபெறுகிறது.

கோஷ்டத்தில் விநாயகர், தட்சிணாமூர்த்தி, மகாவிஷ்ணு, பிரம்மா, அஷ்டபுஜ துர்க்கை, சண்டேஸ்வரர் ஆகியோர் காட்சி தருகின்றனர். கருவறை முன் வல்லபை விநாயகர் பத்து கரங்களுடன் அருள்புரிகின்றார். பிரகாரத்தில் விநாயகர், சிதம்பரேஸ்வரர், சோமாஸ்கந்தர், வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமண்யர், நடராஜர், கஜலட்சுமி ஆகியோர் தரிசனம் தருகின்றனர்.

திருஞானசம்பந்தர் 2 பதிகங்களும், திருநாவுக்கரசர் 3 பதிகங்களும் பாடியுள்ளனர். இக்கோயில் காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் நடை திறந்திருக்கும்.

முன்பக்கம்

   
 
© 2006 www.templeyatra.com - All Rights Reserved.
Designed by www.templeyatra.com